முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Tuesday, 10 January 2017

யார் இந்த சிவன்..?

யார் இந்த சிவன்? பிறந்து கொஞ்சம் நாட்களாகி, நமக்கு கடவுள் அறிமுகமாகும் போது, முதல் அறிமுகம் நிகழும். சிவன், விஷ்ணு, லக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகர், முருகர்… அப்புறம் மெல்ல மெல்ல இன்னும் பலர். எக்கதை கேட்காவிட்டாலும், சிவனின் மனைவி பார்வதி என்றும் அவர்களின் பிள்ளைகள் விநாயகருக்கும், முருகனுக்கும் ஒரு மாம்பழத்திற்காக சண்டை வந்ததும், விநாயகர் சிவனையும் – பார்வதியையும் சுற்றினால் இவ்வுலகையே சுற்றி வந்ததாகும் என்றதும் நாம் நிச்சயம் கேள்விப் பட்டிருப்போம். கதைகளின் வாயிலாக பல உண்மைகளை நம் கலாச்சாரத்தில் வெளிப்படுத்தி இருந்தாலும், இன்று நமக்கு அவை வெறும் கதைகளாகவே தெரியும். சிவனையும் ஒரு கடவுளாகவே தெரியும். அவரிடம் செல்வம் இல்லை, எப்போதும் கண்மூடி தியானத்தில் இருப்பார், பாம்பை அணிந்திருப்பார், சாம்பலைப் பூசி இருப்பார்… இப்படி அவரைப் பற்றி நாம் கேட்ட எதுவுமே நாம் விரும்பும் அழகுநயம் பொருந்தியது அல்ல. இது போதாதென்று, அவரை அழிக்கும் சக்தி என்று வேறு வழங்குவார்கள். இருந்தாலும், சிறு வயதில் இருந்தே சிவனின் மீது பலருக்கும் ஒரு ஈர்ப்பு உண்டாவது என்னவோ உண்மை. அவருக்கு நண்பர்களாக இருந்தவர்கள் மனிதர்கள் அல்ல, பூதகணங்கள். பார்ப்பதற்கு தெளிவான உருவம் கூட அவற்றிற்கு இருக்காது. இவர்களை விட்டால், யக்ஷர்கள். அவர்களும் உருவத்தால் ஈர்க்கக் கூடியவர்கள் அல்ல. அதோடு மட்டுமா? சிவன் மக்களிடையே வாழ்வதை விடுத்து, மயானத்திலே, அங்கிருக்கும் சாம்பலை தன் உடம்பெல்லாம் பூசிக் கொண்டு வாழ்ந்தவர். கோபம் வந்தால், பார்ப்பவரை கண்களாலேயே எரித்திடும் சக்தி கொண்டவர். ஆனால் மனமுருகி, அவரே கதி என்றாகிவிட்டால், நம் அன்பிற்குக் கட்டுப்படும் கருணை உள்ளம் கொண்டவர். தீவிர சந்நியாசி, ஆனால் சதியையும், பின்னர் அவளின் அம்சமாய் பிறந்த பார்வதியையும் மணந்தவர். இப்படி இவரைச் சுற்றி இருக்கும் எல்லாமே முரண்பாடுகள் தான். இவரை இதுதான் இப்படித்தான் என்று வரையறுத்திட முடியாது. அவரை புரிந்து கொள்ளவும் முடியாது. சாதாரண மனிதர்களிடம் இருந்து இப்படி வித்தியாசப்பட்டவர், உண்மையிலேயே இவ்வுலகில் வாழ்ந்தவர். வெறும் கற்பனைகளில் உதித்தவர் அல்ல. இவர் தான் ஆதியோகி. இவரே ஆதி குரு. யோகத்தின் மூலம். இவரது பெயர் யாருக்கும் தெரியாது. அதனால் இவர் எந்நிலையின் பிரதிபலிப்பாய் இருந்தாரோ, அதையே இவரது பெயராய் வழங்கிவிட்டனர்.

மஹாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு. நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது. இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள்.   மஹாசிவராத்திரி அனைவருக்குமே உகந்த நாள். என்றாலும், யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ‘ஷிவா’ என்றால் ‘எது இல்லையோ, அது’. உங்களில் ‘நான்’ என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நீங்கள் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும்.

*நமச்சிவாய என்ற ஒலிக்குப் பின்னால் ஏதாவது விஞ்ஞானம் உள்ளதா?* சிவனை அழிக்கும் சக்தி என்பார்கள். அதாவது உங்கள் அகங்காரத்தை அழிப்பவர், உங்கள் எல்லைகளைத் தகர்ப்பவர் என்று பொருள். ‘ஷிவா’ என்ற வார்த்தையில், ‘ஷி’ என்பது மிகச் சக்தி வாய்ந்த ஒலிக் குறிப்பு. அதைச் சமன்படுத்த, ‘வா’ என்ற ஒலி பின்னால் சேர்க்கப்பட்டுள்ளது. தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ‘ஆஉம் நம ஷிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்தால், அது எல்லையில்லாததை நோக்கிப் பயணப்பட மிக அற்புதமான கதவுகளைத் திறந்திடும்!

4 comments:

  1. நல்ல கருத்துக்களை எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்! (தவறாக நினைக்கவில்லை என்றால் ஒரு ஆலோசனை: தங்கள் வலைப்பதிவின் format needs change. அகலம் அதிகமாக இருப்பதால் படிப்பது கண்களுக்கு சோர்வை உண்டாக்குகிறது. அகலத்தைக் குறைக்கவேண்டியது அவசியம். 2. எழுத்துக்களைப் பெரியதாக்கலாம். 3. ஒரு பாராவில் நான்கு அல்லது ஐந்து வரிகளுக்கு மிகாமல் இருந்தால் படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும். சொல்லும் கருத்து எளிதில் கண்களைத் தொடும்.). அன்புடன் : இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    http://ChellappaTamilDiary.blogspot.com

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete