முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Thursday, 12 January 2017

கேட்பார் இல்லாத கல்வி.....

விருந்தினர் பக்கம் : கேட்பார் இல்லாத கல்வி
எஸ். ராமகிருஷ்ணன்

பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்புவதைப் பார்த்திருக்கிறீர்கள் தானே? குழாயை வாகனத்தின் டேங்கில் சொருகி அழுத்தினால் பெட்ரோல் நிரம்பிவிடும். கற்றுக் கொடுத்தலையும் பெரும்பான்மை ஆசிரியர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள்.அதாவது மாணவனின் மண்டைக்குள் அறிவை கடகடவென நிரப்பிவிட்டால் தனது பணி முடிந்துவிட்டதாக எண்ணுகிறார்கள். கற்றுத்தருதல் அவ்வளவு எளிய விஷயமா என்ன?

வகுப்பறை பற்றி மாணவர்களின் எண்ணமும், ஆசிரியர்களின் எண்ணமும் இரண்டு எதிர்நிலைகளில் உள்ளன. மாணவன் வகுப்பறை என்பதை, அறிவை திணிக்கும் பயிற்சிக்கூடமாக கருதுகிறான். ஆசிரியர், வகுப்பறை என்பதே பாடத்தை எப்படியாவது மாணவனின் தலைக்குள் ஏற்றிவிட வேண்டும் என்பதற்கான சிகிச்சை கூடமாக நினைக்கிறார்.

மாணவர்களை புத்திசாலிகள், முட்டாள்கள் என இரண்டு பிரிவாகத் தான் எப்போதும் வைத்திருக்கிறோம். மாணவனை புத்திசாலியாக்குவதே கல்வி என்று நினைக்கிறோம். அதிக மதிப்பெண் வாங்கிய மாணவனே அறிவாளி. தனித்திறன் உள்ள மாணவன் உதவாக்கரை. இது தான் பொதுப்புத்தி.  மாணவர்களின் கற்கும் திறன் ஒருபோல இருப்பதில்லை. அதுபோலவே தான் ஆர்வமும். எல்லா மாணவர்களுக்கும் கணிதம் பிடிப்பதில்லை.

ஆனால் பிடிக்காத பாடம், பிடிக்காத பயிற்சி எதுவாக இருந்தாலும் கட்டாயத்தின் பெயரால் அதை மண்டைக்குள் திணிக்கிறோம். அது மண்டையில் ஏறாமல் வடிந்தோடிவிடுகிறது.

கல்வியின் தரம் மிகவும் பின்தங்கியிருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள். ஒன்று, ஆசிரியர்கள் கற்றுதருதலை வெறும் வேலையாக மட்டும் செய்கிறார்கள். அதையும் புதிய வழிகளை கையாண்டு முழு ஈடுபாட்டுடன் செய்வதில்லை. இரண்டாவது, மாணவர்கள் கட்டாயத்தின் பெயரால் பள்ளிக்கு வருவதாகவே உணருகிறார்கள். விரும்பி படிப்பதாக நினைப்பவர்கள் வெகுகுறைவு.

மூன்றாவது, கல்வியின் தரத்தை மேம்படுத்த பள்ளியோ, கல்வித்துறையோ, எந்த புதிய முறைகளையும், கற்பிக்கும் முறைகளையும் அறிமுகப்படுத்தவில்லை. பாடப்புத்தகங்களை மாற்றியிருக்கிறார்கள். கிரேடு முறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஆனால் அதே ஆசிரியர், அதே வகுப்பறை பாணி தானே நடைமுறையில் உள்ளது. இதை விடவும் பள்ளி என்றாலே பயம் என்ற அடிப்படை எண்ணம் அப்படியே தானிருக்கிறது. மாணவர்களிடம் ஆளுமையை உருவாக்க வேண்டும் என்பது கல்வியின் நோக்கமாகவே இல்லை.

தனியார் பள்ளியோ, அரசுப் பள்ளியோ எதுவாக இருப்பினும் மாணவர்கள் மதிப்பெண் வாங்கும் திறனை மட்டுமே வளர்க்க முனைகின்றன. மனப்பாடம் செய்யும் இயந்திரமாக மாணவர்களை மாற்றுவதே அவர்களின் லட்சியம். சுயசிந்தனையும், கற்பனை ஆற்றலும், தனித்துவமான எண்ணங்களும் கொண்ட மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கல்வி நிலையங்களின் கட்டடங்கள் உயர்ந்த அளவிற்கு, கல்வியின் தரம் உயரவில்லை.

அரசுப் பள்ளிகள் என்றாலே பொதுப் புத்தியில் தரமற்ற கல்வி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. அதுவே தான் அரசுப்  பள்ளி ஆசிரியர்கள் குறித்தும். ஆனால் இது உண்மையில்லை.அரசுப் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளில் நிறைய மாறியுள்ளன. அதன் உள்கட்டுமானமும், கற்றுத்தரும் முறைகளும், கட்டாய டியூசன் இல்லாமலே மாணவர்களை மதிப்பெண் வாங்க வைப்பதில் காட்டும் அக்கறையும் அரசுப் பள்ளிகளின் மீது புதிய நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறது. ஆனால் இது தமிழகம் முழுவதும் நடைபெறவில்லை.

தமிழகத்தின் அரசுப் பள்ளிகள் நான்கு நிலைகளில் இயங்குவதாக அறிகிறேன். ஒன்று பெருநகரங்களில் உள்ள அரசுப் பள்ளிகள். இதில் ஆண்கள் பள்ளியை விடவும் பெண்கள் பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. காரணம், தேர்ந்த ஆசிரியர்களும், கற்றுக் கொள்வதில் கவனம் காட்டும் மாணவிகளும். இந்தப் பள்ளிகளில் உள்ள பிரச்சினை, போதுமான உபகரணங்கள், அறிவியல் சாதனங்கள், கணினி மயமாக்கம் இல்லாமல் போனதும், ஆசிரியர்களுக்குப் புதிய கற்றுத்தரும் முறைகளில் பயிற்சியில்லாமல் இருப்பதும்தான். அத்தோடு, ஆங்கில வழிக் கல்வி என்றபோதும் ஆங்கிலம் பேச வைப்பதில் ஏற்படும் பிரச்சனைகள்.

ஆங்கிலம் மட்டுமில்லை, தமிழில் முறையாகப் பேசவும் எழுதவும் பலருக்கும் பயிற்சியில்லை. ஒரு பக்கம் தவறில்லாமல் மாணவர்களுக்குத் தமிழில் எழுத தெரியவில்லை என்பதே உண்மை. ஏன் தமிழ் கற்றுக் கொள்வதில் இவ்வளவு தடுமாறுகிறார்கள் என்றால், அதைக் கற்றுதருவதில் காட்டப்படும் அலட்சியம் மற்றும் அந்த மதிப்பெண் முக்கியமில்லை என்ற எண்ணம்.

இரண்டாவது நிலையில் உள்ளவை, சிறுநகரங்களில் உள்ள அரசுப் பள்ளிகள். ஆண்கள், பெண்கள் இருபாலர் படிக்கும் பள்ளிகளாகவே இவை பெரிதும் செயல்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பான்மை ஆசிரியர்கள் பாடத்தை முடித்துவிட்டால் போதும் என நினைக்கிறார்கள். கிராமப்புற மாணவர்கள் அதிகம் என்பதால் அவர்கள் கற்றுக் கொள்ளும் திறன் குறைவு. அதை ஊக்கப்படுத்த எந்தச் சிறப்பு முயற்சிகளும் ஏற்படுத்தப் படவில்லை. பெருநகரப்பள்ளிகளின் இடவசதியும் இங்கே கிடையாது.
மூன்றாவது நிலை, கிராமப்புற அரசுப் பள்ளிகள். இவற்றில் பாதிக்கும் மேல் முறையான பராமரிப்பும், அக்கறையுமின்றியே செயல்பட்டு வருகின்றன. எட்டாம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவனின் தரம் பெருநகரில் இரண்டாம் வகுப்பு படிப்பவனின் நிலையில்தான் உள்ளது.

ஆசிரியர்கள் பலரும் வெளியூர்களில் இருந்து வந்து வேலை செய்கிறார்கள் என்பதால் அவர்கள் பள்ளிகளுக்கு வருவதையே பெரிய தியாகம் போல நினைக்கிறார்கள். வகுப்பறையில் கணினியோ, காணொளி காட்சிகள் மூலம் பாடம் கற்பிக்கப்படுவதையோ இவர்கள் இன்னமும் அறியவில்லை. அதைவிடவும் மாணவர்களில் பலருக்கும் புத்தகங்களைப் பார்த்து வாசிப்பதற்குக் கூடத் தடுமாற்றமிருக்கிறது.

நான்காவது நிலை, மலைவாழ் மக்கள், மற்றும் சிறுபான்மையினருக்காக நடத்தபடும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள். இதன் நிலை ரத்தக்கண்ணீர் வரவழைக்கக்கூடியது.  இப்படியும் பள்ளிகள் நடைபெறுகிறதா என வேதனைப்படும் நிலையில் இவை இயங்குகின்றன. மாணவர்கள் குறைவு. ஆசிரியர்கள் கிடையாது. முறையான வகுப்பறையில்லை. ஆட்டுமந்தைகளைப் போல மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள்.

இதுபோன்ற பள்ளிகளில் மாணவர்களுக்குக் குடிநீர், கழிப்பறை கூடக் கிடையாது. கற்றுத்தருதலில் அக்கறையே கிடையாது.  சிறைக்கூடங்களில் கூட இதைவிடத் தரமான கல்வி கிடைக்கிறது என்பதே உண்மை.

இந்த நான்கு நிலைகளிலும் காணப்படும் முக்கியமான பிரச்சனைகள்: 1) ஆசிரியர்கள் கற்றுத்தருதலை வேலையாக மட்டும் கருதுகிறார்கள். அதையும் வேண்டாத வேலை என்று தான் நினைக்கிறார்கள். 2) உபகரணங்களை, காணொளிகளை, மாற்றுக் கல்விமுறையைக் கொண்டு வகுப்பறையை நடத்துவது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை.

3) ஆசிரியர்கள் எவரும் பாடப்புத்தகங்களுக்கு வெளியே எதையும் படிப்பதேயில்லை. 4) மாணவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளச் சிரமப்படும் போது சிறப்புக் கவனம் கொடுக்கப்படுவதில்லை. 5) கற்றுத்தருதலின் தரம் எப்படி உள்ளது என்பதைக் குறித்து எவ்விதமான கண்காணிப்பும், பரிசீலனைகளும், பரிசோதனைகளும் கிடையாது.

கல்வி அதிகாரி பள்ளியை பார்வையிட வருகிற நாளில் கூடக் கல்வியின் தரம் பரிசோதிக்கபடுவதில்லை. 6) நூலகமோ, ஆளுமையை வளர்ப்பதற்கான கலைகளின் ஈடுபாடோ எதுவும் கிடையாது. 7) ஆசிரியர்களுக்குள் நல்லுறவு கிடையாது. 8) பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர வேறு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. 9) நியமிக்கபட்ட ஆசிரியர்களைத் தவிர வெளியில் இருந்து மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு எடுக்க எவரும் வருவதில்லை. 10) தனியார் பள்ளிகளைப் போல வாரம் ஒருமுறை ஆசிரியர்களுக்குள் கூட்டம், மாணவர்களின் கற்கும் திறன் குறித்த மதிப்பீடு, புதிய அறிவியல் சாதனங்களின் அறிமுகம், தொடர்ந்த அக்கறை, இவை அரசுப்பள்ளிகளில் மாற்றப்பட வேண்டியவை.

அதே நேரம் தனியார் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்பட்டுள்ளதா எனக்கேட்டால் மதிப்பெண் வாங்குவதில் போட்டி உருவாகியுள்ளதே தவிரக் கல்வியின் தரத்தில் பெரிய மாறுதல் இல்லை. தனியார் பள்ளிகளில் எல்லாமும் கட்டாயமயமாக்கபடுகின்றன. தண்டனையும் அபராதமுமே மாணவனைக் கற்றுக் கொள்வதில் முனைப்புக் காட்ட வைக்கின்றன, ஆசிரியர்கள் நிர்வாகத்தின் கெடுபிடியால் அதிகபட்ச வேலையைச் செய்ய வேண்டியுள்ளது. அதிகக் கட்டணம், அதிக மாணவர்கள், வகுப்பறை என்பது தண்டனைக்கூடமானது. இவையே, தனியார் பள்ளிகளின் தரம்.

நான் அறிந்தவரை ஜே. கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையால் நடத்தப்படும் பள்ளிகளே இரண்டிற்கும் நடுவில் புதிய வெளிச்சத்தைக் காட்டுகின்றன. அங்கே ஆசிரியர்கள் அண்ணா, அக்கா என்றே அழைக்கபடுகிறார்கள்.ஒவ்வொரு மாணவன் மீதும் தனி அக்கறை காட்டப்படுகிறது. இசை, ஒவியம், கவிதை, விளையாட்டு, யோகா, இவை கல்வியோடு இணைந்து கற்றுதரப்படுகிறது. ஹோம்வொர்க் கிடையாது.

கல்வியோடு மாணவனின் ஆளுமையையும் சேர்த்து வளர்த்தெடுக்கப்படுகிறது, முக்கியமான காரணம் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு. முனைவர் பட்டம் முடித்துவிட்டு அமெரிக்காவில் பணியாற்றியவர்கள் அதை உதறிவிட்டு இங்கே வந்து குறைந்த சம்பளத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

இயற்கையோடு இணைந்த பள்ளி வளாகம். எழுத்தாளர்கள், கலைஞர்கள், சிந்தனையாளர்கள், எனப் பலரையும் வகுப்பறைக்கு அழைத்து வந்து பேச வைக்கிறார்கள். படிப்பை ஒரு போட்டியாக நினைக்கும் மனப்பாங்கினை மாற்றியிருக்கிறார்கள்.

தமிழக அளவில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்றால் அதற்கு முதலில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு கல்வியின் தரத்தினை மேம்படுத்துவதற்கு என்றே ஒரு தனி கல்வி அதிகாரி நியமிக்கபட வேண்டும். தற்போதுள்ள மாவட்ட கல்வி அதிகாரி ஆசிரியர்கள் இடமாற்றம், சம்பளம், பயணப்படி, உத்தரவுகள் என அலுவலப்பணிகளை மட்டுமே மேற்கொள்கிறார். இதற்கு மாற்றாக கல்வியின் தரத்தை மேம்படுத்த தனித்துறையாக இயங்கவேண்டும்.

அது போலவே ஆசிரியர்கள் பிஎட், எம்எட் படித்திருக்கிறார்களே தவிரக் கற்றுதரும் முறையில் ஒரு பரிசோதனையும் செய்தவர்களில்லை. அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் தொடர்ந்த ஆலோசனைகளும் தரப்பட வேண்டும், தங்கள் துறை சார்ந்த புத்தகங்களைக் கூட ஆசிரியர்கள் படிப்பதில்லை. இதற்காக மாநில அளவில் ஆசிரியர்களுக்கான சிறப்பு மையம் (State Resource Centre) ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அங்கே புதிய பயிற்சிகள் தரப்படுவதுடன், வகுப்பறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களை மேற்கொள்ள வேண்டும்.

உயர்கல்வி என்றவுடன், அரசு கல்விநிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி என தேடும் நாம் ஆரம்பப் பள்ளி என்றதும் மட்டும் ஏன் தனியார் கல்வி நிலையங்களுக்கு ஒடுகிறோம். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட வேண்டும்.

பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பியதுடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கும் தவறான போக்கு மாற்றப்பட வேண்டும். மாணவனின் கற்கும் திறன் முழுமையாக வெளிப்பட பெற்றோர்களின் அக்கறையும் அவசியமானது.

பள்ளிக்கு வெளியில் இருந்து பல்துறை ஆளுமைகள் வகுப்பு எடுக்க அழைக்கப்பட வேண்டும். பள்ளி நூலகங்கள் முறையாகச் செயல்படுவதுடன் புக் கிளப் எல்லாப்பள்ளிகளிலும் துவங்கபட வேண்டும். இது போலவே கற்றல் குறைபாடு கொண்ட மாணவர்களுக்குச் சிறப்பு ஆலோசனைகளும் கூடுதல் அக்கறையும் எடுக்கபட வேண்டும்.

பாடப்புத்தகங்கள் திருத்தி அமைக்கபட்டிருக்கின்றன.ஆனால் கற்பிக்கும் முறையில் ஒரு மாற்றமும் இல்லை. இது போலவே மாணவனின் திறனை மதிப்பிடுவதில் பரீட்சை என்ற ஒன்றை தவிர வேறு வழிகளேயில்லை.

வகுப்பறையின் சுவர்கள் ஒரு பள்ளியில் கூட வண்ணமயமாகயில்லை. முதலில் வகுப்பறை சுவர்களை வண்ணப்படுத்துதல் வேண்டும்.  அது போலவே இருக்கைகள், சுகாதாரமான கழிப்பறைகள், குடிநீர், உணவு உண்ணும் இடங்கள். கதை சொல்லுதலை கல்விமுறையின் வழியாக இணைத்துக் கொள்ள வேண்டும்.

இவை யாவையும் விடக் கல்வியின் தரம் பற்றி மதிப்பிட மாநில அளவில் ஒரு குழு அமைக்கபட வேண்டும். இந்தக் குழுவில் ஆசிரியர்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், சமூக சிந்தனையார்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள் எனப் பலதரப்பினரும் இடம் பெற வேண்டும். இவர்கள் தனிக்குழுக்களாகப் பள்ளியை பார்வையிட்டு தொடர்ந்து ஆலோசனைகள் தர வேண்டும். மாணவர்களை நேசிக்கும் ஆசிரியர் என்பது சாத்தியமற்ற கனவைப் போலிருக்கிறது. அந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

கல்வியில் ஏதாவது மாற்றம் உருவாக வேண்டும் என்றால், அது தனித்துச் சாத்தியமாகாது. சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாகவே அது சாத்தியப்படும். ஆனால் கல்வியில் ஏற்படும் மாற்றங்களே சமூக மாற்றத்திற்கான முக்கியமான தூண்டுதல் ஆகும். ஆகவே கல்வியின் தரத்தை உயர்த்துவதும், பள்ளிகல்வி குறித்துச் சிந்திப்பதும் ஆசிரியர்களின் வேலை மட்டுமில்லை. நம் அத்தனை பேரின் பொறுப்புணர்வும் கூட.

தென்கொரியாவில் இப்படி!    இங்கே எப்போது?
தென்கொரியாவில் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வினை அரசாங்கம் நடத்துகிறது. அது தான் அங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கும் தேர்வு. இந்தத் தேர்வு நடக்கும் நாட்களில் அரசாங்கம் எதை எல்லாம் செய்கிறது என்ற பட்டியலை பாருங்கள்

பரீட்சை நாள் அன்று காலை  அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள்  மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்குச் செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை  எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன. 

முக்கிய காரணம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து, ரயில், சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.

பரீட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பரீட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவனச் சிதைவை உண்டுபண்ணக்கூடும்.

பரீட்சைக்குத் தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக இரண்டு மாதங்கள் முன்பிருந்தே மாலையில் முன்னதாக அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது

பரீட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில்  பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்குள் எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.

பரீட்சை நாளில் இடையூறு செய்ய கூடாது என்று பரீட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள் கூட ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கப்படுகின்றன.

தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது, மின்சாரத் துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரீட்சை நடைபெற உதவி செய்கிறது.

தாமதமாகவோ அல்லது நுழைவுத் தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கப்பட்டு உதவி செய்கிறார்கள்.

கேள்விதாளை 400 ஆசிரியர்கள் கொண்ட குழு நான்கு நிலைகளில் உருவாக்கி முடிவு செய்கிறது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் ஒரு போதும் இடம் பெறுவதில்லை.

    நன்றி புதிய தலைமுறை...

2 comments: