முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Tuesday, 10 November 2020

இரண்டாம். கொரோனா அலை..வருமா..?

*இன்று (05.11.2020) வந்துள்ள 'தினமலர்' மதுரை பதிப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை*:
       
*இரண்டாம் கொரோனா அலை வருமா?*
- *டாக்டர் கு. கணேசன் இராஜபாளையம்*
 
கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்து வரும் சூழலைத் தொடர்ந்து, தமிழக அரசு பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கோயம்பேடு சந்தை ஆகியவற்றைத் திறக்க முடிவெடுத்துள்ள இந்த நேரத்தில் ‘இரண்டாம் கொரோனா அலை வீசுமோ’ எனும் அச்சம் பொதுமக்களிடம் பரவலாகி இருக்கிறது. என்ன காரணம்?

*தொற்று அலைகள் மூன்றுவிதம்*

ஒரு பெருந்தொற்றுப் பரவலில் 3 அலைகள் உண்டு. முதன்முதலாக ஒரு தொற்று தொடங்கி நாடு முழுவதுமோ, உலக நாடுகளிலோ அது பரவுவது முதல் அலை. கடந்த 7 மாதங்களாக நாட்டில் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று, முதல் அலையைச் சேர்ந்தது.

அடுத்து, அந்தத் தொற்றின் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து, தொற்றுப் பரவலும் குறைந்து வரும் நேரத்தில், மறுபடியும் அது வீரியம் பெற்று, முன்பைவிட அதிக அளவில் பரவுவதை இரண்டாம் அலை என்கிறோம். உலகில் 1918ம் ஆண்டில் 50 கோடி மக்களைப் பலி வாங்கிய ‘ஸ்பானிஸ் ஃபுளு’ மார்ச்சில் முதல் அலையாகவும் செப்டம்பரில் இரண்டாம் அலையாகவும் பரவியதை இங்கு நினைவு கூறலாம்.

அதே தொற்று நன்றாகக் கட்டுக்குள் வந்த பிறகு, மக்களின் வாழ்க்கை நிலைமைகள் முற்றிலுமாக மீண்ட பிறகு, சில காலம் கழித்து, அந்தத் தொற்றுக்குக் காரணமான கிருமி தன் உருவத்தில் சில மாறுதல்களை உண்டாக்கிக்கொண்டு, பருவ காலங்களின் துணையுடன் மறுபடியும் பரவ ஆரம்பிப்பதை மூன்றாம் அலை என்கிறோம். வருடா வருடம் மழைக்காலத்தில் பரவும் 'பருவகால ஃபுளு' இதற்கு உதாரணம்.

பொதுவாக, மூன்றாம் அலை பெருந்தொற்றாகப் பரவாது. அப்படிப் பரவுவதற்குள் தடுப்பூசி வந்துவிடும். ஆகவே, ஆபத்து மிகுந்த இரண்டாம் அலை வராமல் காப்பதுதான் முக்கியம்.

*யார் காரணம்?*

ஒரு பெருந்தொற்று இரண்டாம் அலையாக வீசுவதற்கு வழக்கமான தொற்று எச்சரிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்கத் தவறுவதுதான் முக்கியக் காரணம். உதாரணத்துக்கு, காலில் காயம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு மருந்துக் கட்டு போடுகிறோம். ஓரளவு ஆறிவரும்போது, இனி அது தானாகவே ஆறிவிடும் என்று தன்னிறைவு அடைந்து, சிகிச்சையை அலட்சியப்படுத்தி, மருந்தும் போடாமல், துணிக்கட்டும் கட்டாமல், அலைந்து கொண்டிருந்தால், அந்தப் புண்ணில் மறுபடியும் சீழ் கட்டிப் புரையேறிவிடும். அதுமாதிரி, கொரோனா தொற்றுப் பரவல் இப்போது குறைந்து விட்டது எனும் நினைப்பில் பண்டிகைக் காலம், பொருளாதார வீழ்ச்சி போன்ற நிர்பந்தங்களால் மக்களும் சரி, அரசும் சரி கொரோனாவுக்கான பாதுகாப்பு எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்துகின்றனர். இதனால், கொரோனாவுக்குக் கொண்டாட்டம் கூடி இரண்டாம் அலை வீசுவதற்குத் தயாராகிவிட்டது.

*வரவேற்பு கொடுக்கும் பண்டிகைகள்*

தற்போது அடுத்தடுத்து வரும் பண்டிகைகள் கொரோனா தொற்றுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதில் முன் வரிசையில் நிற்கின்றன. புத்தாடை இல்லாமல், பொட்டுத் தங்கம் வாங்காமல் பண்டிகையைக் கொண்டாட முடியுமா? இலவசம், தள்ளுபடி, சலுகை விலையை இழக்க முடியுமா? இந்த நினைப்பில், கடந்த 7 மாதங்களாக வீட்டில் அடைந்துகிடந்த மக்கள் இப்போது பொதுவெளியில் தாராளமாக நடமாடுகின்றனர். கடைகளில், மால்களில், சந்தைகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளி இல்லாமலும் அவர்கள் அலைவதைப் பார்க்கும்போது மக்கள் கொரோனாவை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பாதுகாப்பைப் புறக்கணித்து மக்கள் கூடுவதுதான்  இரண்டாம் கொரோனா அலை வீசுவதற்கும் காரணம் என்பதை எப்போது அவர்கள் புரியப்போகிறார்கள்?

ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளத்திலும் விநாயக சதுர்த்திக்குப் பிறகு மும்பையிலும், தசராவுக்குப் பிறகு புதுடில்லியிலும், பூரி ஜகந்நாதர் ரத யாத்திரையைத் தொடர்ந்து ஒடிசாவிலும் கொரோனா இரண்டாம் அலையாக வீசியதால், அங்கெல்லாம் தொற்றுப் பரவலும் பாதிப்பும் அதிகரித்திருப்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. மக்கள்தான் அதைக் கவனிக்கத் தயாரில்லை.

*ஆபத்து தரும் குளிர்காலம்*

இந்தியாவில் முக்கிய விழாக்களும் பண்டிகைகளும் குளிர்காலத்தில் வருவது இன்னோர் ஆபத்து. வழக்கத்தில் குளிர்காலத்தில் நிலவும் உலர் காற்று, வைரஸ் பரவலுக்குத் துணை செய்கிறது. தொற்றாளர்களின் திரவத் திவலைகள் மூலம் வெளிவரும் கரோனா கிருமிகள், அந்தத் திரவம் உலர்ந்த பின்னும் சில மணி நேரம் காற்றில் கலந்திருக்கும். தொற்றாளர் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டாலும் அவர் வெளிப்படுத்திய சுவாசத் துளிகள் நீண்ட நேரம் காற்றில் மிதந்துகொண்டிருக்கும். அப்போது எவராவது முகக்கவசம் அணியாமலும் தனி மனித இடைவெளி இல்லாமலும் அந்த இடத்துக்கு வருவாரென்றால் அவருக்கும் தொற்று பரவிவிடும்.
பொதுவாக, வெளியிடங்களைவிட காற்றோட்டம் குறைந்த இடங்களில் இம்மாதிரி கரோனா தொற்று பரவுவது அதிகம். குளிர்காலத்தில் மக்கள் வீட்டில் முடங்கிக்கிடக்கும் காலமும் நேரமும் அதிகம் என்பதால் கரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு 19 மடங்கு அதிகரிக்கிறது என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

இந்தியாவில் புதுடில்லி, பஞ்சாப் மாநிலங்களும் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, போலந்து போன்ற நாடுகளும் குளிர்காலத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதை மறைக்க முடியுமா?

*பள்ளிகள் திறப்பு*

தமிழகத்தில் 9ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை பள்ளிகள், கல்லூரிகள் தீபாவளிக்குப் பிறகு திறக்கப்பட உள்ளன. இது பேராபத்துக்கு அச்சாரம் என்பதை அரசு ஏனோ உணரவில்லை. பள்ளிகளில் மாணவர்கள் தனிமனித இடைவெளி காப்பதும் முகக்கவசம் அணிந்திருப்பதும் எல்லா நேரமும் சாத்தியமில்லை. அதிலும் பத்து நிமிட இடைவெளியில் கழிப்பறைக்குச் சென்றுவர வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது மாணவர்கள் நெருக்கியடித்துக் கழிப்பறைக்குச் செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. கொரோனா தொற்றாளர் அருகில் பத்து நிமிடங்கள் நின்றால் போதும் தொற்று பரவிவிடும். எனவே, பள்ளிகளில் மாணவர்களுக்குத் தொற்று பரவ கழிப்பறை நேரமே போதும்.

அது மட்டுமில்லாமல், தொற்றைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் வீட்டில் உள்ள பெற்றோருக்கும் மூத்தவர்களுக்கும் எளிதில் பரப்பிவிடுவார்கள். இதன் விளைவால் மீண்டும் ஒரு கொரோனா தொற்றுச் சங்கிலி உருவாகி, இரண்டாம் அலை வீசுவதற்கு வழி கிடைத்துவிடும்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, கொரோனா சூழல் குறைந்துவிட்டதாகக் கருதி பள்ளிகளைத் திறந்த இஸ்ரேல், பிரிட்டன், தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலையாக வீறுகொண்டு எழுந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இந்த எச்சரிக்கை தமிழகத்துக்கும் பொருந்தும். அரசு ஏனோ இதை அலட்சியப்படுத்துகிறது.

*திரையரங்குகள் திறப்பு*

50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுவும் கொரோனா இரண்டாம் அலைக்கு அடிக்கல் நாட்டுவதுபோல்தான். பாதி இருக்கைகளுடன் எந்தவொரு திரையரங்கமும் இயங்கப் போவதில்லை. திரையரங்குகளில் சன்னல்களை மூடாமல் இருக்க முடியாது. மூடிய அறைகளில்தான் தொற்றுப் பரவல் அதிகம். முறையாக முகக்கவசம் அணிந்துகொண்டு 3 மணி நேரம் திரையரங்கில் இருப்பது யாருக்கும் சாத்தியமில்லை. மால்களில் மின்தூக்கிகளில் வாடிக்கையாளர்களை அடைப்பதுபோல் திரையரங்குகளும் விதிமீறல்களுடன் இயங்கினால் கொரோனா பலருக்கும் பரவிவிடும்.

இப்படிப் பல வழிகளில் இரண்டாம் கொரோனா அலை வீசுவதற்கான சூழல்கள் பெருகி வருவதை மக்களும் அரசும் புரிந்துகொள்ள வேண்டும். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி வரும்வரை முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி காப்பது, கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்வது ஆகிய மூன்றும்தான் நம்மைக் காக்கும் கவசங்கள் என்பதை மக்கள் உணர வேண்டும். *பள்ளிகளையும் திரையரங்குகளையும்* திறப்பது தொடர்பான முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் இரண்டாம் கொரோனா அலையைத் தடுக்க முடியும்.

*டாக்டர் கு. கணேசன்,*  
*மருத்துவ இதழியலாளர்,*
*ராஜபாளையம்.*

நன்றி.. தின மலர்
மக்கள் நலம் கருதி இது மீள்பதிவு

No comments:

Post a Comment