முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Wednesday, 8 February 2017

தேடுவோம் நல்ல குருவை...

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாயே முதல் குரு. தாய் தான் குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டும் முதல் குரு. ‘அம்மா’ என்ற அற்புத வார்த்தையைச் சொல்லித்தரும் முதல் குரு. மாதா பிதாவைக் காட்ட, பிதா குருவிடம் சேர்க்க, குரு தெய்வத்திடம் சேர்க்கிறார்.

குரு ஒரு கடல். கடல் நிலத்தில் ஓடும் நதிகளை வாÐ என்று அழைப்பதில்லை. நதிகள் தான் கடலைத் தேடி ஓடி கலக்கின்றன. எல்லா நதிகளும் கடலில் கலந்து தன் தனித்தன்மையை இழந்து, கடலின் தன்மையைப் பெறுகிறது. சீடர்களும் அதுபோல குருவைத் தேடி ஓடி குருவின் தன்மையை அடைகிறார்கள். நதிகள் எத்தனை கலந்தாலும் கடல் பொங்குவதில்லை. எத்தனை சீடர்கள் சேர்ந்தாலும் குருவுக்குத் தலை கணப்பதில்லை. குரு நிறைகுடம் அதனால் என்றும் தளும்புவதில்லை.
குரு ஒரு சூரிய ஒளிக்கதிர். சூரிய ஒளிக்கதிர் மாளிகையின் மீதும் ஒரே மாதிரி ஒளியை வீசுகிறது. மண் குடிசை மீதும் அதே ஒளியை மாறுபாடில்லாமல் தருகிறது. எல்லா சீடர்களுக்கும் தரம் பார்க்காமல் ஒரே போதனையைத் தருகிறார். ரோஜா மலர் அதை வாங்கியவருக்கும் ஒரே மணத்தைத் தருகிறது. சூடிக்கொண்டவருக்கும் அதே மணத்தைத் தருகிறது. அதுபோல் குருவும் சீடர்களைத் தனித்தனியாக பிரித்துப் பார்த்துப் போதிப்பதில்லை.

சாதாரண மனிதன் தான் சாதி, மதம், இனம், நிறம் எனப் பிரித்துப் பார்க்கிறான். அனைவரையும் சமமாக பாவிக்கும் பெருங்குணம் கொண்டவர் குரு.
மாமரம் பழத்தைத் தனக்கென வைத்துக்கொள்வதில்லை. தன்னைப் பாதுகாத்து வளர்ப்பவர்களுக்கும் சரி, அடித்து பறிப்பவர்களுக்கும் சரி ஒரே மாதிரி பழத்தைத் தான் தருகிறது.

குருவும் குழந்தையும் ஒன்று. குழந்தை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும். வேற்றுமை பாராட்டுவதில்லை. பிறருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுபோலத்தான் குருவும் பேதம் பார்ப்பதில்லை.

குருவும் பசுவும் ஒன்று. பசு அமைதியின் அடையாளம். பாலைத் தன் கன்றுக்குப் போக மீதியை நமக்கும் அளிக்கிறது. பசுவின் முகம் அசைபோடும்போது ஞானியின் முகத்திற்கு ஒப்பாக இருக்கும். கண்கள் மேலேபோய் அமைதியோடு தியானம் செய்வதைப் போல இருக்கும். அதுபோல் குருவும் தனக்கென ஏதும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு அள்ளி ஞானத்தை வழங்கும் ஞான தான வள்ளல் ஆகிறார்.

குரு கைகாட்டி போன்றவர். கைகாட்டி இந்த இடத்திற்குப் போகலாம் என்ற வழியை மட்டுமே காட்டும்; அந்த இடத்திற்குக் கொண்டு போய் சேர்க்காது. அதுபோல குருவும் வழிகாட்டுவார். நாம் தான் நமது முயற்சியால் உயர்வை அடைய வேண்டும்.

குரு தோணி போன்றவர். தோணி மற்றவர்களை அக்கரைக்கு அனுப்பிவிட்டு எப்போதும் இக்கரையிலே நிற்கிறது. அதுபோல குருவும் வாழ்க்கை கடலைக் கடக்கும் வழியையும், சாதிக்கும் வழியையும் மற்றவர்களுக்குக் காட்டிவிட்டு மாற்றம் இல்லாமல் நின்று கொள்கிறார்.

குருவும் ஏணியும் ஒன்று. மற்றவர்கள் உயரே செல்ல ஏணிப்படிகள் உதவுகிறது. ஆனால் ஏணி இருக்கும் இடத்திலேயே இருந்து விடுகிறது. அதுபோல் குரு மற்றவர்களை உயரத்திற்கு ஏற்றிவிட்டு தான் இருந்த இடத்திலேயே இருக்கிறார்.

குரு துடைக்கப் பயன்படும் துடைப்பானைப் போன்றவர். துடைப்பான் தன் மீது அழுக்கைப் படிய விட்டுக்கொண்டு, இடத்தைச் சுத்தம் செய்கிறது. அதுபோல் குரு மற்றவர்களின் மன அழுக்கை நீக்கி, மனிதனை ஒளிரச் செய்கிறார்.

உண்மையான ஆன்மீக குருவுக்கு விளம்பரம் தேவையில்லை. ‘என்னிடத்தில் தேன் இருக்கிறது; என்னிடம் வாருங்கள்’ என்று மலர் தேனீக்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. பூக்கள் மலரும்போது தேனீக்கள் தானாக மலரை நாடிவந்து சேரும். மரத்தில் பழம் பழுத்துத் தொங்கும்போது பறவைகளுக்கு அழைப்பு அனுப்புவதில்லை. பழத்தைத் தேடித்தான் பறவைகள் வரும். குளத்தைத் தேடித்தான் கொக்குகள் வரும்.
நல்ல வாழ்க்கைக்கு நல்ல நெறியோடு வாழ நல்ல குருவை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்.இன்றைய நற்சிந்தனைகளின் வழி நடப்போம்..

நன்றி...
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....

1 comment:

  1. நல்ல குரு அமைவதும் இறைவன் கொடுத்த வரம்.

    ReplyDelete