முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Thursday, 16 April 2015

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
 
பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.

 குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

 சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை ‘ஜனசக்தி’ பத்திரிகை வெளியிட்டுவந்தது.

 விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய ‘குயில்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

 பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். ‘படித்த பெண்’ திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

 இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ‘சின்னப் பயலே சின்னப் பயலே’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே’, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னரே’, ‘செய்யும் தொழிலே தெய்வம்’ ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

 எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.

 மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

 இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

நன்றி தி தமிழ் இந்து நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி சிவலிங்கம் 

அன்புடன் சிவா...
 


 

Monday, 13 April 2015

ஒரே ஆன்டிராய்டு மொபைலில் இரண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எப்படி?

பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் இலவச அழைப்புகள், புகைப்படம், வீடியோ, இசை மற்றும் ஃபைல்களை பறிமாறி கொள்ள உதவுகின்றது. தற்சமயம் பெரும்பாலானோரும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வருவதற்கு முக்கிய காரணமாக அதன் எளிய வடிவமைப்பு மற்றும் சிறப்பான சேவையை கூறலாம்.

இருந்தும் வாட்ஸ்ஆப் செயலியில் ஒரே குறை இருக்கின்றது, டூயல் சிம் ஆன்டிராய்டு போன்களை பயன்படுத்துவோர் இரு சிம் கார்டுகளிலும் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. ஒரு ஸ்மார்ட்போனில் ஒரு வாட்ஸ்ஆப் அக்கவுன்டு மட்டும் தான் பயன்படுத்த முடியும். இந்த பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும் ஆன்டிராய்டு செயலி தான் OGWhatsApp, இந்த செயலியை பயன்படுத்தி பயனாளிகள் இரு அக்கவுன்டை ஒரே ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியும்.
OGWhatsApp இரு வாட்ஸ்ஆப் அக்கவுன்டுகளை ஒரே கருவியில் பயன்படுத்த அனுமதிக்கின்றது, இதை செய்ய உங்களது போனினை ரூட் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

உங்களது வாட்ஸ்ஆப் டேட்டாவை முழுமையாக பேக்கப் செய்து ரீ ஸ்டோர் செய்ய வேண்டும்.

வாட்ஸ்ஆப் டேட்டாக்களை அழிக்க வேண்டும், இதை மேற்கொள்ள செட்டிங்ஸ் >> ஆப்ஸ் >> வாட்ஸ்ஆப் >> க்ளியர் டேட்டா என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அடுத்து /sdcard/WhatsApp directoryயை /sdcard/OGWhatsApp என பெயர் மாற்ற வேண்டும். இதை மேற்கொள்ள ஃபைல் மேனேஜர் பயன்படுத்தலாம்.

ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியை உங்களது ஆன்டிராய்டு கருவியில் இருந்து அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

அடுத்து OGWhatsApp செயலியை உங்களது ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால் செய்த பின் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியில் பதிவு செய்யப்பட்ட பழைய நம்பரை ஓஜி வாட்ஸ்ஆப் செயலியில் வெரிஃபை செய்ய பயன்படுத்த வேண்டும்.

பின் ஒரிஜினல் வாட்ஸ்ஆப் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி

Saturday, 11 April 2015

வ வே சுப்பிரமணிய ஐயர் 10

ராஜலட்சுமி சிவலிங்கம் 

வ.வே சுப்பிரமணிய ஐயர் 

சுதந்தர போராட்ட வீரரும் தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்பட்டவருமான வ வே சுப்பிரமணிய ஐயர் (வ.வே.சு. ஐயர்) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 2). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 

 திருச்சி, வரகனேரியில் பிறந்தவர் (1881). தந்தை வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி யில் பி.ஏ. பட்டம் பெற்றார். மாகாணத்தில் முதல் மாணவராகத் தேறினார். 

 பின்னர் சென்னைக்குச் சென்று சட்டம் படித்து சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராக சேர்ந்து வக்கீல் தொழில் புரிந்தார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். 

 பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக1907-ல் லண்டன் சென் றார். அங்கே இந்தியா ஹவுசில் தங்கியிருந்த சமயத்தில் வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்தர புரட்சி வீரர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். 

 ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகள் பெற்றார். மற்றும் பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார். பாரிஸ்டர் படிப்பிலும் தேர்ச்சியடைந்தார். பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். 

 இதனால் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு, பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாக 1910-ல் புதுச்சேரி வந்து சேர்ந்தார். அரவிந்த கோஷ், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 

 1919-ல் மகாத்மா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரால் கவரப்பட்ட ஐயர், அகிம்சாவாதியாக மாறினார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அகிம்சா வழியில் சுதந்தரத்துக்காகப் போராடினார். 

 தேசபக்தன் இதழின் ஆசிரியராக சிலகாலம் பணியாற்றி னார். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை கற்று தமிழ் மொழி செழிப்பதற்குப் பெரும் பங்காற்றினார். 1922-ல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். 

 இங்கு நன்னெறி, அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய வற்றுடன் உடல் வலிவூட்டும் பயிற்சிகளும் அளிக்கப்பட் டன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குளத்தங்கரை ஆசிரமம் என்ற சிறுகதையை வெளியிட் டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. 

 இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு. 1921-ல் பெல்லாரி சிறையில் இருந்தபோது ‘கம்பராமா யணம் - எ ஸ்டடி’ என்ற ஆங்கில நூலை எழுதினார். ஆங்கிலத்தில் திறனாய்வுக் கட்டுரைகள் பல வடித்தார். 

 கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகம் தொடங்கி புத்தகங்களை வெளியிட்டார். மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள் ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வுக் கான அடிப்படைகளை அமைத்தவர் என்றும் தமிழ் நவீன சிறுகதை தந்தை என்றும் போற்றப்படும் வ. வே. சு. ஐயர், 1925-ஆம் ஆண்டு, 44-வது வயதில் ஒரு விபத்தில் காலமானார். 

நன்றி இந்து தமிழ் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி சிவலிங்கம் 

மாணவர்கள் நலம் கருதி....
அன்புடன் சிவா....

Thursday, 26 March 2015

மைக்ரோசாப்ட்டின் புத்தம் புது Foldable கீ போர்ட்..


தன்னுடைய லூமியா 640 மற்றும் லூமியா 640 எக்ஸ்.எல். மொபைல் போன்களின் அறிமுகத்துடன், வேறு சில அறிவிப்புகளையும் வெளியிட்டது மைக்ரோசாப்ட் நிறுவனம். முதன் முதலாக மடித்து வைத்து எடுத்துச் சென்று, பின் விரித்து வைத்து செயல்படுத்தக் கூடிய கீ போர்ட் ஒன்றை, அண்மையில் பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகப்படுத்தியது. ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் இயக்க முறைமைகளில் இதனை இயக்கலாம். இது விண்டோஸ் 10 சிஸ்டத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுடனும் இயங்கும். இது ஒரு வயர்லெஸ் கீ போர்ட். புளுடூத் இணைப்பில் இயங்கும். மொபைல் போனில் இயங்கும் விண்டோஸ் 10 இயக்கத்திலும் இதனை இயக்கலாம்.

இது எப்போது விற்பனைக்கு வரும் என்றும் அதன் விலை குறித்தும் மைக்ரோசாப்ட் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த ஆண்டு, விண்டோஸ் 8.1 சிஸ்டம் பயன்படுத்தும் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாக அப்டேட் செய்திட வழங்கப்படும் என அறிவித்தது. விண்டோஸ் 10 சிஸ்டத்தின் சில அம்சங்கள், அது பயன்படுத்தப்படும் ஹார்ட்வேர் அமைப்பினைப் பொறுத்து வேறுபடும். 

ஏறத்தாழ 20 லட்சம் பேர் விண்டோஸ் இன்ஸைடர் புரோகிராமில் பதிந்து, விண்டோஸ் 10 சோதனைத் தொகுப்பினை சோதித்து வருகின்றனர். இவர்கள், ஏறத்தாழ 9 லட்சம் பதிவுகளை பின்னூட்டமாக அளித்துள்ளனர். அவை ஒவ்வொன்றும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த புரோகிராமில் பதிந்தவர்களுக்கு, விண்டோஸ் 10 சிஸ்டம் பெறுவதில் முன்னுரிமை அளிக்கப்படும். கார்டனா டூல், விண்டோஸ் 10 சிஸ்டத்தின் ஒரு பகுதியாகவே தரப்படும். இந்த அறிவிப்புகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் துணைத் தலைவர் வெளியிட்டார்.

மொபைல் போனுக்கான விண்டோஸ் 10 தொழில் நுட்ப சோதனைத் தொகுப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இதுதான் இந்த முறையில் முதலாவதாக வெளியிடப்பட்ட தொகுப்பு என்றும், இது இன்னும் உருவாக்க வளர்ச்சியில் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.

Wednesday, 11 March 2015

பாதுகாவலராய் பகா எண்கள்:

கணிதம் அறிவோம்



பள்ளிகளின் கணித வகுப்புகளில் 1,2,3,4,………………………….. என்பவை இயல் எண்கள் என்றும் இதில் சில எண்களுக்கு ஒன்று மற்றும் அதே எண்ணைத்தவிர வேறு காரணிகள் இல்லையெனில் அந்த எண்கள் பகா எண்கள் அல்லது முதன்மை எண்கள் (Prime numbers) என்றும் மற்ற எண்கள் அதாவது இரண்டுக்கு மேற்பட்ட காரணிகளை உடைய எண்கள் பகு எண்கள் அல்லது கலப்பின எண்கள்(Composite Numbers) என்றும் கற்பிக்கப்படுகிறது.
பகா எண்கள் : 2,3,5,7,11,13,17,………………………………….
பகு எண்கள் : 4,6,8,9,10,……………………………………………
பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்தப் பகாஎண்களின் பின்னால் மறைந்துள்ளன.
பகா எண்களின் எண்ணிக்கை
இயல் எண்களில் எண்ணற்ற பகா எண்கள் உள்ளன. பகா எண்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது என்பது பிரபஞ்சத்தின் எல்லையைக் காண்பது போன்றது. மாபெரும் பகா எண்களைக் கண்டறிவது அவ்வளவு எளிதல்ல. அதற்குக் கடின உழைப்பும் நீண்ட காலமும், அதிசக்தி வாய்ந்த கணினிகளும் மென்பொருளும் தேவை.
பகா எண்களில் பரவல்
இயல் எண்களில் பகா எண்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து அமையவில்லை. உதாரணமாக 2 மற்றும் 3 க்கும் இடைவெளி ஒன்று, 5க்கும் 7க்கும் இடைவெளி இரண்டு, 23க்கும் 29க்கும் இடைவெளி 6. இயல் எண்களின் ஊடே மேலே செல்லச் செல்லப் பகா எண்களின் எண்ணிக்கை குறைவாகவும் அவ்வெண்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாகவும் உள்ளது.
பகா எண்களின் சிறப்பு
1) ஒன்று என்ற எண் பகு எண்ணோ அல்லது பகா எண்ணோ அல்ல.
2) ஒரே இரட்டை படை பகா எண் 2 மட்டுமே.
3) தொடர்ச்சியாக அடுத்தடுத்த எண்கள் பகா எண்களாக அமைந்தவை 2,3 மட்டுமே.
4) (5,7),(11,13),(17,19)………இது போன்ற இரட்டைகள் இரட்டை பகா எண்கள் எனப்படுகின்றன. அதாவது அடுத்தடுத்த பகா எண்களுக்கிடையேயான இடைவெளி 2 ஆக இருக்கும்.
5) எந்த ஒரு இயல் எண்ணையும் பகா எண்களின் பெருக்குத் தொகையாக எழுத இயலும். 15=3x5, 20=2x2x5………………
6) எந்த ஒரு இரட்டை படை எண்ணையும் இரு பகா எண்களின் கூட்டுத் தொகையாக எழுத இயலும். 32=3+29, 50=7+43, …………………………..
பகா எண்களில் அழகு
31
331
3331
33331
333331
3333331
33333331
இந்த எண்கள் 18ம் நூற்றாண்டு வரை நிரூபணம் ஆன பகா எண்கள். ஆனால் அடுத்த எண் 333333331 பகா எண் அல்ல. காரணம் 17 x 19607843 = 333333331.
பகா எண்களின் பயன்பாடு
பகா எண்கள் இன்று நம்மைக் காக்கும் பாதுகாவலராக விளங்குகின்றன. வங்கிகளில் நடைபெறும் பணப்பரிவர்த்தனை, பங்கு சந்தை, ATM மையங்கள் எனப் பல இடங்களில் சங்கேதக் குறியீடுகள் (passwords) அத்தியாவசியமாக உள்ளன.
இந்தச் சங்கேதக் குறியீடுகளை மற்றவர்கள் உடைத்துக் கண்டுபிடிப்பதைத் தவிர்க்க இரு பகா எண்களின் பெருக்குத் தொகையை கொண்டு அமைக்கிறார்கள். இவ்வாறு அமைக்கப்படும் சங்கேதக் குறியீடுகளில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கையைப் பொருத்து அதைக் கண்டுபிடிக்கச் சில நூறு ஆண்டுகள் முதல் ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தப் பகா எண்கள் குறித்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கணித மேதை யூக்ளிட், அதன் பின்னர் வந்த ஆய்லர், கோல்ட்பெக் முதல் தமிழகக் கணித மேதை இராமானுஜர் வரை பலர் பல உண்மைகளையும், தேற்றங்களையும் வழங்கியிருந்தாலும். பகா எண்கள் என்பது கணித அறிஞர்களுக்கு இன்னமும் ஆழ்கடல் ஆய்வாகத்தான் உள்ளது.
S.ஸ்ரீதர், ஆசிரியர் பயிற்றுநர், 


நன்றி  தமிழ் இந்து...
மாணவர்கள் நலம் கருதி..
அன்புடன்   சிவா...

Thursday, 5 March 2015

கணினிச் சொற்கள்

அறிவோம் நம் மொழியி ல்

  

கீ இன் (key in) - உள்ளிடு
கம்ப்யூட்டர் (computer) - கணிப்பொறி, கணினி
கம்ப்யூட்டர் சயின்ஸ் (computer science) - கணிப்பொறியியல்
கம்ப்யூட்டரைஸ் (computerize) - கணினிமயமாக்கு
சேவ் (save) - சேமி
மெமரி யூனிட் (memory unit) - நினைவகம்
சி.பி.யூ (Central Processing Unit) - மையச் செயலகம்
சென்ட்ரல் புராசசர் (central processor) - மையச் செயலி
சாஃப்ட்வேர் (software) - மென்பொருள்
கீபோர்டு (keyboard) - விசைப்பலகை
கன்ட்ரோல் கீ (control key) - கட்டுப்பாட்டு விசை
கன்ட்ரோல் பேனல் (control panel) - கட்டுப்பாட்டகம்
ப்ரோகிராம் (program) - கட்டளைநிரல்
பேக் ஸ்பேஸ் (backspace) - பின்நகர்வு
கர்ஸர் (cursor) - சுட்டி
பீட்டா (beta) - அறிமுகப் பதிப்பு
சிப் (chip) - சில்லு
ஃபான்ட் (font) - எழுத்துரு
கேரக்டர் மேப் (character map) - எழுத்துரு வரைபடம்
கம்ப்யூட்டர் லாங்குவேஜ் (computer language) - கணினி நிரல்மொழி
கம்ப்யூட்டர் யூஸர் (computer user) - கணினிப் பயனர்
டச் ஸ்க்ரீன் (touchscreen) - தொடுதிரை
டச் ஸ்க்ரீன் கம்ப்யூட்டர் (touchscreen computer) - தொடுதிரைக் கணினி
லேப்டாப் (laptop) - மடிக்கணினி
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் (desktop computer) - மேசைக் கணினி
ஷட் டவுன் (shut down) - (கணிப்பொறியை) நிறுத்து, அணை
டிரைவர் (driver) - இயக்கி
ஸ்க்ரீன் (screen) - திரை
கீ (key) - விசை, பித்தான்
க்ளிக் (click) - சொடுக்கு, அழுத்து
ஃபைல் (file) - கோப்பு
ஒபன் (open) - திற
க்ளோஸ் (close) - மூடு
மினிமைஸ் (minimize) - சுருக்கு
மேக்ஸிமைஸ் (maximize) - பெரிதாக்கு
இன்ஸ்டால் (install) - உள்நிறுவு


நன்றி  தமிழ்  இந்து ......

Thursday, 26 February 2015

சொத்து

ஒரு நிமிடக் கதை:

கீர்த்தி




ஒரேயொரு சிறிய வீட்டை வைத்துக் கொண்டு எட்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்ட தன் அப்பா மீது இனம்புரியாத கோபம் கோபாலுக்கு.
பொதுச் சொத்தாய் இருந்த பூர்வீக வீட்டை விற்று கிடைத்த பணத்தை தன் சகோதர, சகோதரிகள் ஏழு பேருடன் பங்கு பிரித்ததில் கோபாலுக்கு இரண்டு லட்சம் ரூபாய்தான் கிடைத்தது.
தன் நண்பன் சுரேஷை நினைத்துப் பார்த்தான்…
‘சுரேஷ் ஒரே பிள்ளை என்பதால் வெகு சுலபமாக எந்த முயற்சியும் இன்றி தன் அப்பாவின் எழுபது லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கு அதிபதியாகிவிட்டான். நான்? ஒரு சிறிய ஃபிளாட் வாங்குவதற்கு லோன் வாங்கி இன்னும் வட்டிதான் கட்டிக் கொண்டிருக்கிறேன்…’ யோசிக்க யோசிக்க மனம் களைத்துப் போனது கோபாலுக்கு.
மறுநாள் தற்செயலாய் ரோட்டில் சுரேஷைச் சந்தித்தான்.
“சுரேஷ்! பிறந்தா உன்னை மாதிரி ஒரே பிள்ளையா பிறக்கணும்டா. அப்பாவோட சொத்து முழுவதும் கிடைக்கும். என்னைப் பாரு. கூடப் பிறந்த ஏழு பேருக்கும் சொத்தைப் பிரிச்சதுல என் பங்கு வெறும் 2 லட்சம் ரூபாய். நிஜமா சொன்னா உன் மேலே எனக்குப் பொறாமையாக் கூட இருக்கு” என்று பெருமூச்சு விட்டபடி சொன்னான்.
“அடப்போடா... உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கூடப் பிறந்தவங்க ஏழு பேர் வந்து நிற்பாங்க. ஆனா எனக்கு? என் குழந்தைகளுக்கு சித்தி, அத்தை, சித்தப்பா, பெரியப்பான்னு எந்த உறவுமே கிடையாது. ஒரு பிறந்த நாள்னாகூட நாங்களே கேக் வெட்டி நாங்களே சாப்பிட்டுக்கறோம்.
ஆனா ஒரு சின்ன நிகழ்ச்சியைக்கூட உன்னோட அண்ணன் தங்கைன்னு ரொம்ப சந்தோஷமா கொண்டாடுறீங்க. எல்லாத்துக்கும் மேலே எனக்காக வந்து பேச ஆளில்லைன்னு யார் யாரோ சண்டை சச்சரவுக்கு வர்றாங்க.
பணம் காசு இல்லேன்னா என்னடா, உங்க அப்பா உனக்கு சொந்த பந்தம்ங்கிற பெரிய சொத்தை சேர்த்து வெச்சிருக்கிறார். நிஜமாலுமே உன்னைப் பார்த்தாதான் எனக்குப் பொறாமையா இருக்கு” என்று சுரேஷ் கூறினான்.
தன் அப்பா மீதிருந்த கோபம் மெல்ல மெல்ல கரையத் தொடங்கியிருந்தது கோபாலிடம். 

நன்றி   தமிழ்   இந்து  நாளிதழ் ....

விக்டர் ஹ்யுகோ 10


விக்டர் ஹ்யுகோ
விக்டர் ஹ்யுகோ
உலகப் புகழ்பெற்ற பிரஞ்சு கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர், மனித உரிமைகள் ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட விக்டர் ஹ்யுகோ (Victor Hugo) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 பிரான்ஸ், பெசன்கான் என்ற இடத்தில் பிறந்தவர் (1802). தந்தை ராணுவ அதிகாரி. மாவீரன் நெப்போலியனின் கீழ் ஜெனரலாகப் பணி புரிந்தவர். வழக்கறிஞராகப் பணியாற்றச் சட்டம் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம் இருந்தது. இதற்கு இவரது அம்மாவின் முழு ஆதரவும் இருந்தது.
 சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கித் தனது கவிதைகளையும் தனது நண்பர்களின் எழுத்தையும் அதில் வெளியிட்டார். தனது முதல் கவிதை நூலை 1821-ல் வெளியிட்டார். முதல் நாவல் 1823-ல் வெளிவந்தது. தொடர்ந்து எண்ணற்ற நாடகங்களும் வெளிவந்தன.
 இவரது கவிதைகளில் லே கன்டம்பிளேஷன்ஸ் மற்றும் லா லெஜன்டே லே சீக்ளெஸ் ஆகியவை மிகவும் போற்றப்பட்டன. லே மிஸரபிள்ஸ், நோட்ரே-டேம் டி பாரீஸ் ஆகிய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
 ஹ்யூகோவின் எழுத்துக்கள் எளிய மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை, துயரங்கள், வேதனைகளை எடுத்துக் கூறின. முறையான வரிவிதிப்பு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சமூக மாற்றங்கள், யுத்தமற்ற அமைதியான வாழ்க்கை ஆகியவற்றுக்காகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடினார்.
 இளம் வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணத்தில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், 10-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்தார்.
 தனது படைப்புகளில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில்நடை பெற்ற மாபெரும் அரசியல் மாற்றங்கள் அனைத்துக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து தெரிவித் துள்ளார். தனது இலக்கிய செல்வாக்கை சமூக மாற்றங்கள், முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தினார்.
 1848-ல் நடைபெற்ற தேர்தலில் இவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1849-ல் ஏழ்மைக்கு எதிராக இவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றத்தில் மக்களாட்சி போய் மீண்டும் குடியாட்சி நிறுவப்பட்டது.
 அதை எதிர்த்து மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார். இதனால் நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டி வந்தது. ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் இடைவிடாமல் குரலெழுப்பினார். தனது நாவல்களையே இவர் தனது போராட்ட ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்.
 இவரது நாடகங்கள் நூற்றுக்கணக்கான முறை மேடை நாடகமாக அரங்கேறின. திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டன. இவரது படைப்புகள் சுயநலமற்ற, தொலைநோக்குப் பார்வையையும், மனித நேயத்தையும் எடுத்துக்கூறின. இறக்கும் தருவாயில் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்காக எழுதி வைத்தார்.
 இவரது 80-வது பிறந்த தினத்தை அரசும் மக்களும் சேர்ந்து திருவிழா போலக் கொண்டாடினார்கள். இவரது லே மிஸரபிள் நாவலை சுத்தானந்த பாரதி ‘ஏழை படும் பாடு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார். 1885-ம் ஆண்டு, 83-வது வயதில் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 


நன்றி   தமிழ்    இந்து  நாளிதழ் ......