முதற்கண்ணாக.,

இந்த வலைப்பூவை பார்வையிட வருகை தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினை சமர்பிக்கிறேன்...

Thursday, 26 February 2015

விக்டர் ஹ்யுகோ 10


விக்டர் ஹ்யுகோ
விக்டர் ஹ்யுகோ
உலகப் புகழ்பெற்ற பிரஞ்சு கவிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர், மனித உரிமைகள் ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணங்கள் கொண்ட விக்டர் ஹ்யுகோ (Victor Hugo) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 26). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
 பிரான்ஸ், பெசன்கான் என்ற இடத்தில் பிறந்தவர் (1802). தந்தை ராணுவ அதிகாரி. மாவீரன் நெப்போலியனின் கீழ் ஜெனரலாகப் பணி புரிந்தவர். வழக்கறிஞராகப் பணியாற்றச் சட்டம் பயின்ற இவருக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம் இருந்தது. இதற்கு இவரது அம்மாவின் முழு ஆதரவும் இருந்தது.
 சொந்தமாக ஒரு பத்திரிகையைத் தொடங்கித் தனது கவிதைகளையும் தனது நண்பர்களின் எழுத்தையும் அதில் வெளியிட்டார். தனது முதல் கவிதை நூலை 1821-ல் வெளியிட்டார். முதல் நாவல் 1823-ல் வெளிவந்தது. தொடர்ந்து எண்ணற்ற நாடகங்களும் வெளிவந்தன.
 இவரது கவிதைகளில் லே கன்டம்பிளேஷன்ஸ் மற்றும் லா லெஜன்டே லே சீக்ளெஸ் ஆகியவை மிகவும் போற்றப்பட்டன. லே மிஸரபிள்ஸ், நோட்ரே-டேம் டி பாரீஸ் ஆகிய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை.
 ஹ்யூகோவின் எழுத்துக்கள் எளிய மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை, துயரங்கள், வேதனைகளை எடுத்துக் கூறின. முறையான வரிவிதிப்பு, ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சமூக மாற்றங்கள், யுத்தமற்ற அமைதியான வாழ்க்கை ஆகியவற்றுக்காகவும் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடினார்.
 இளம் வயதில் தொடங்கிய இவரது இலக்கியப் பயணத்தில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், 10-க்கும் மேற்பட்ட நாடகங்கள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்தார்.
 தனது படைப்புகளில் 19-ம் நூற்றாண்டில் பிரான்சில்நடை பெற்ற மாபெரும் அரசியல் மாற்றங்கள் அனைத்துக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ கருத்து தெரிவித் துள்ளார். தனது இலக்கிய செல்வாக்கை சமூக மாற்றங்கள், முன்னேற்றங்களுக்காகப் பயன்படுத்தினார்.
 1848-ல் நடைபெற்ற தேர்தலில் இவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1849-ல் ஏழ்மைக்கு எதிராக இவர் ஆற்றிய உரை வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றத்தில் மக்களாட்சி போய் மீண்டும் குடியாட்சி நிறுவப்பட்டது.
 அதை எதிர்த்து மக்களைப் புரட்சிக்குத் தூண்டினார். இதனால் நாட்டைவிட்டுத் தப்பியோட வேண்டி வந்தது. ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் இடைவிடாமல் குரலெழுப்பினார். தனது நாவல்களையே இவர் தனது போராட்ட ஆயுதங்களாகப் பயன்படுத்தினார்.
 இவரது நாடகங்கள் நூற்றுக்கணக்கான முறை மேடை நாடகமாக அரங்கேறின. திரைப்படங்களாகவும் தயாரிக்கப் பட்டன. இவரது படைப்புகள் சுயநலமற்ற, தொலைநோக்குப் பார்வையையும், மனித நேயத்தையும் எடுத்துக்கூறின. இறக்கும் தருவாயில் சொத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்காக எழுதி வைத்தார்.
 இவரது 80-வது பிறந்த தினத்தை அரசும் மக்களும் சேர்ந்து திருவிழா போலக் கொண்டாடினார்கள். இவரது லே மிஸரபிள் நாவலை சுத்தானந்த பாரதி ‘ஏழை படும் பாடு’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தார். 1885-ம் ஆண்டு, 83-வது வயதில் காலமானார். இவரது இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர். 


நன்றி   தமிழ்    இந்து  நாளிதழ் ......

No comments:

Post a Comment